மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகையுடன் ஆராய்ச்சி பயிற்சிப் படிப்பு
கட்டுமானப் பொறியியல் மையத்தில் மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகையுடன் கூடிய 2 வருட ஆராய்ச்சி பயிற்சிப் படிப்பு தொடங்கப்படுகிறது.
இதற்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக சென்னை கட்டுமானப் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் நாகேஷ், ஒருங்கிணைப்பாளர் ஏ.ராமமோகன் ராவ், கே.ஆர்.ஸ்ரீதரன் ஆகியோர் கூறியதாவது:
கட்டுமான ஆராய்ச்சி மையம், பெங்களூரு வான்வெளி ஆய்வகம் ஆகியவை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்.) கீழ் இயங்குகின்றன.
இந்த 2 அமைப்புகளும் இணைந்து, கட்டுமானப் பொறியியல் துறையில், 2 வருடம் தங்கியிருந்து படிக்கும் முழுநேர ஆராய்ச்சி பயிற்சிப் படிப்பை தொடங்குகின்றன.
இந்த படிப்பு சி.எஸ்.ஐ.ஆர்.-ன் வழிகாட்டுதலின்படி தொடங்கப்படுகிறது.
இந்த பயிற்சிப் படிப்பு ஆகஸ்ட், செப்டம்பரில் தொடங்கும்.
அதற்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.
இந்தப் படிப்பில் சேர பொறியியல் படிப்பில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தது 70 சதவீத மதிப்பெண் அல்லது 7.0 சி.ஜி.பி.ஏ. உடன் கூடிய முதல் வகுப்பு பெற்றிருக்க வேண்டும்.
கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்தப் படிப்புக்கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம்.
இதில் மத்திய அரசின் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.
இதில் சேர விரும்புகிறவர்கள் சி.எஸ்.ஐ.ஆர்.-ல் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு கட்டணம் கிடையாது.
படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், சி.எஸ்.ஐ.ஆர்.-ல் ஏற்கெனவே உள்ள திட்டங்களில் பயிற்சி விஞ்ஞானியாக பணியமர்த்தப்படுவார்கள்.
அவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகை அளிக்கப்படும்.
தவிர, சி.எஸ்.ஐ.ஆர்-ன் இதர சலுகைகளும் வழங்கப்படும்.
இந்த ஆராய்ச்சிப் பயிற்சி 4 செமஸ்டர்களைக் கொண்டது.
முதல் செமஸ்டர் சென்னையிலும், மற்ற செமஸ்டர்கள் பெங்களூரிலும் நடைபெறும்.
அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் சி.எஸ்.ஐ.ஆர். விஞ்ஞானியாக பணியில் சேரும் வாய்ப்பும் உண்டு.
இந்தப் படிப்பில் சேருவதற்கு ஆன்லைனில் பதிவு செய்வதற்கும், படிப்பு குறித்த மேலும் விவரங்களை அறிவதற்குமான இணையதள முகவரி: www.csir.res.in
தொலைபேசி எண்கள்: 044-22542175/39
